குருதேவர் சுவாமி சின்மயானந்தர்
- 03 AUGUST 2016 |
- WRITTEN BY SWAMI SIVAYOGANANDA
ஒவ்வொரு தனிமனிதருக்கும், எவ்வித பாகுபாடுமின்றி ஆன்மீகத்தின் உட்பொருளையும், அதனை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்து அனைவரும் ஆன்ம மலர்ச்சியும், ஆனந்தமும் பெற துறவுடன் , தளராத தொண்டும் ஆற்றிய, இறையனுபூதி பெற்ற மாமனிதர் சுவாமி சின்மயானந்தர். தனது எழுச்சி மிக்க சொற்பொழிவுகளால் பகவத்கீதையை உலகெங்கிலும் உள்ள அனைவரும் அறியச் செய்த பெருமையும் இவரைச் சாரும்.
கல்வியும், துறவும்
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் 1916 ம் வருடம் மே 8 ம் நாள் பிறந்தார். பாலகிருஷணன் எனப் பெயரிடப்பட்டார். திருச்சூரில் பி.ஏ பட்டப்படிப்பும், லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் சட்டத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அப்பொழுது நடந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறையிலடைக்கப்பட்டு ,உடல் நலம் குன்றிய காராணத்தால் காவலர்களால் சாலையோரம் தூக்கி வீசப்பட்டார் . உயிர் பிழைத்தவர் வாழ்வின் பயன் உணர்ந்தார்.
சட்டம் பயின்றவராக இருந்தாலும் எழுத வேண்டுமென்ற தணியாத ஆர்வத்தினால் “தி நேஷனல் ஹெரால்டு” பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராக தன் எழுத்துப் பணியினை துவங்கினார். கூர்மையான அறிவும், தேடலும் , சந்தேகமும், நாத்திக சிந்தனைகளில் நாட்டமும் கொண்டிருந்த அவர் , தேசத்திற்கு எவ்வித பயனுமின்றி, பொய் வேடமிட்டு வாழும் துறவிகளை தன் கட்டுரைகள் மூலம் உலகிற்கு தோலுரித்து காட்ட எண்ணினார். இமயத்திலுள்ள ரிஷீகேசம் சென்றார். அங்கு தன் தூய்மையினால் , துறவிற்கே பெருமை சேர்த்து , அனைவரையும் அன்பினால் அரவணைத்து வாழும் சுவாமி சிவானந்தரைக் கண்டார். அவரால் ஈர்கப்பட்டு அகமாற்றம் கொண்டு, துறவறம் பூண்டார். பின் உத்திரகாசி சென்று சுவாமி தபோவனம் என்ற மகானிடத்தில் வேதாந்தக் கல்வி பெற்று அவரது சீடரானார்.
தான் கண்டுணர்ந்த வேதாந்த உண்மைகள் இமயத்தின் குகைளிலேயே புதைந்து கிடப்பதால் பயனில்லை. ஒட்டுமொத்த மனித குலமும் இதன் பயனைப் பெற வேண்டுமென்று எண்ணி, தனியொரு மனிதாராக தன் புனிதப் பயணத்தைத் துவங்கி ஆன்மிக போதனைகளைப் பரப்பி வந்தார். பின்னாளில் அதுவே மாபெரும் சின்மயா இயக்கமாக உருவெடுத்தது.
குழந்தைகளே எதிர்காலம்
“ நமது குழந்தைகளே நமது எதிர்காலம்” என்றுணர்ந்தவர் சுவாமிஜி . நமது நாகரீக் கல்வி குழந்தைகளை அறிவுடையவர்களாக உருவாக்குகின்றது. அது பயன்தரும் கல்வி என்பதில் ஐயமிலை. ஆனால் அது நம் குழந்தைகளுக்குரிய பாதுகாப்பு கல்வி அல்ல. பயன்தரும் கல்வி வேறு. பாதுகாப்பளிக்கும் கல்வி வேறு. ஒன்று மதிக்கதத் தக்கது. மற்றொன்று வணங்குதலுக்கு உரியது. எல்லா அதிர்வுகளையும் தாங்கும் ஆற்றல் கொண்ட ,வலிமையான மனதை வளர்க்கும் கல்வியை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். ஆன்மீகம் சார்ந்த கல்வியே அதற்கு அடித்தளமாகும். நல்ல பண்பாளர்களாக, தேசத்தையும், தெய்வீகத்தையும் போற்றும் கலாச்சார உரம் மிக்க குழந்தைகளாக அவர்களை உருவாக்க விரும்பினார். “குழந்தைகள் ஏட்டுக்கல்வியை மட்டுமே நிரப்பும் வெற்றுப் பாத்திரங்கள் அல்ல, அவர்கள் சுடர் விட்டு ஓளிரும் பொருட்டு ஏற்றப்பட வேண்டிய தீபங்கள்” எனக் கருதினார். அதற்கான கல்விச் சாலைகளையும், ஆன்மிக விஷயங்களை போதிக்கும் பாலவிஹார் மையங்களையும் உருவாக்கினார்.
பெற்றோர்கள் ஒருமுறை சுவாமிஜியிடம் “ நம் குழந்தைகளுக்கு பண்புகளை எப்பொழுது போதிக்க வேண்டும்” எனக் கேட்டனர். சுவாமிஜி “ குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே” என வேடிக்கையாகக் கூறினார். கேட்டவர்கள் விழித்தனர். சுவாமிஜி சிரித்துக் கொண்டே “முதலில் அப் பண்புகளின் இருப்பிடமாக நீங்கள் திகழ வேண்டும். அவர்கள் நாம் கூறவதை ஒருபொழுதும் கேட்பதில்லை. நம் நடத்தையையே பின்பற்றுகின்றார்கள்” என்றார். பெற்றோர்களே ம குழந்தைகளுக்கு முன்னொடியும், முதல் ஆசானும் ஆவர். அவர்கள் இதனை அறிந்து , நம் பாரம்பரியத்தை உணரும் விதமாக, பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தினார். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆன்மீக நூல் பயிலும் குழுக்களை துவக்கினார்.
நம்மால் முடியும் (அ) இளைஞர் ஆற்றல்
ஒரு நாடு வலுப்பெற வேண்டுமெனில், இளைய சமுதாயாத்தின் சிந்தனைகளை சீர்படுத்த வேண்டும். அவர்களிடமுள்ள அபரீத ஆற்றலை நெறிப்படுத்த வேண்டும். “இளைஞர்கள் பயனற்றவர்கள் அல்ல. சரியாகப் பயன்படுத்தப்படாதவர்கள். அவர்கள் கவனமற்றவர்கள் அல்ல. சரியாகக் கவனிக்கப்படாதவர்கள்” இதுவே சுவாமிஜியின் திடமான நம்பிக்கை. அவர்களுடைய வேகத்தை குறைப்பது விவேகமல்ல. அவ்வேகத்தை நல்ல திசையினில் செலுத்த உதவ வேண்டும். அதுவே நம் கடமை. அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்காக அதிக நேரம் செலவிட்டார். அவர்களில் ஒருவரானர். உயர்ந்த உண்மைகளை எளிதாக்கிக் கொடுத்தார். “நம்மால் முடியும்” என்ற புத்தகத்தின் மூலம் அவர்களுக்கு விழியும், விடிவும் கொடுத்தார். சுவாமிஜியின் விரைந்து செயல்படும் திறனாலும், அதிநுட்பான மதக்கோட்பாடுகளுக்கு அவரளித்த அறிவுப்பூர்வமான விளக்கங்களாலும் அவர்பால் எண்ணற்ற இளைஞர்கள் ஈர்கப்பட்டனர். “சின்மயா யுவ கேந்திரா” துவங்கியது. கம்பன் தரும் காட்சி, பாரதி என பல தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களை அரங்கேற்றினர். “இந்தியர் விழிப்பே இந்தியாவின் விழிப்பு” என்னும் தேச பெருமை போற்றும் புத்தகத்தை வடித்தனர். மூன்று கோடி மாணவர்களுக்கு வினியோகம் செய்தனர்.அவர்களின் திறமைகள் ஆக்கப்பூர்வமான செயல் வடிவம் பெற்றது. வீழும் இந்தியாவை வீறு கொண்டு வாழும் இந்தியாவாக மாற்ற உறுதி பூண்டனர்.
மா சக்தி
பொருள் நாட்டம் உடையோரைக் காட்டிலும், இறை நாட்டம் மிக்க பெண்களே இல்லறத்தின் கண்கள். “இல்லறப் பெண்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாக இருந்தால் குடும்பச் சூழல் வளமடையும். அக்குடும்பம் நல்லுபதேசங்களைக் கேட்க எவரையும் நாடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மாறினால் குடும்பச் சூழல் மாறும். தாயும், பாதை காட்டும் விழியும், குருவும் நீங்களே” . பெண்களுக்கு சுவாமிஜி ஆற்றிய உரையின் சாரமிது. மாசக்தியே மகோன்னத சக்தி. வீட்டுக் கதைகளிலே காலத்தை வீணடிக்காது வேதாந்தக் தத்துவங்களை பெண்களும் ஆர்வத்துடன் படித்து ,அதன் உண்மைகளை அறிய வேண்டுமென விரும்பினார். அதற்காக உருவாக்கபட்ட “சின்மய தேவி குழுக்கள்” ஆன்மீக மையங்களாக புதியதோர் உலகம் படைத்தது.
உபதேசம்
மனிதர்களுடைய ஆசைகளுக்கும், செயல்களுக்கும் காரணமாக இருப்பது , மனதனின் ஆழ் மனதில் புதைந்திருக்கும் வாசனைகள் என்னும் சிந்தனைப் பதிவுகளே. ஏற்கனவே ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்ட விஷயங்களே மீண்டும் ஒலிப்பது போல, எண்ணப் பதிவுகளே நல்ல,தீய செயல்களாகவும், ஒருவரின் பிடிவாதமான நம்பிக்கையாகவும் மாறுகின்றது. எதை நாம் தீவிரமாகச் சிந்திக்கின்றோமோ, அல்லது விடாதுசெய்து பழகுகின்றோமோ அதுவே ஆழ்மனப் பதிவுகளாக மாறுகின்றது.
ஆகவே நல்லன சிந்திக்கவும், செய்யவும் மனதைப் பழக்க வேண்டும். அவை சுயனலமற்றிருந்தால் ஆன்மீக சாதனையாக பரிணமித்து, நம் மனதைத் துய்மையாக்கும். தூயமனதில் தேவையற்ற பழைய பதிவுகள் நீங்கும். மனம் அமைதி அடையும். அமைதியான மனமே இறைனிலை அனுபவத்தை பெறும். அகந்தை அழியும். அந் நிலையே மனிதப் பிறவியின் நோக்கம் முற்றுப் பெறும் உயர் நிலை. இது நேராத வரை பிறப்பு,இறப்பு,இன்பம்,துன்பம் போன்ற இருமைகள் தீராது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் நம் கடமைகளை இறைசிந்தனைகளோடு செய்து பழக வேண்டும். கீதை, உபனிடதங்கள்அதற்கான வழியை அறிவுறுத்துகின்றது.
தவம்
சுவாமிஜியின் வாழ்க்கை வெறும் பயணமல்ல. ஓர் புனிதத் தவம். அது அதிசயங்களின் தொகுப்பல்ல. அடிமுடி காண இயலாத உண்மையின் ஆழ்நாதம். சத்தியமே சின்மயமாக வடிவெடுத்து வந்த விந்தை. மெய்வருத்தம் பாராது 78 ஆண்டுகள் வரை தேசப்பற்றுடன் , சமுதாயா மேம்பாட்டிற்காகவும் அவர் செய்த பணிகள் மகத்தானது. தன்னை துறவி என்று உலகினின்று தனிமைப்படுத்திக் கொள்ளாது பொறுப்புள்ள பிரஜையாகவும் திகழ்ந்தார். தன் பணி தன்னோடு முடிந்து போகாது தன்னைப் போலவே பலரை உருவாக்கிய அவர் ஓர் அழிவற்ற விதை. 1993ம் ஆண்டு இதே நாளில் இவ்வுடல் விட்டு அகன்றார். அவருடைய நூற்றாண்டினை முன்னிட்டு இந்திய அரசு அவரது உருவச் சின்னம் பொறித்த பத்து ரூபாய் நாணயத்தை வெளிட்டு கௌரவித்துள்ளது.
மகான்களின் அடிச்சுவடுகளை மனம் பற்றி நடப்போம் ! இன்புற்று வாழ்வோம் !!
Last modified on Monday, 18 February 2019 03:36