திட்டமிடுங்கள்… செயல்படுத்துங்கள்….
- 13 JULY 2016 |
- WRITTEN BY SWAMI SIVAYOGANANDA
“செயலைத் திட்டமிடு , திட்டமிட்டபடி செயல்படு” என்பது சுவாமி சின்மயானந்தரின் பொன்மொழி. செயல் இல்லாத திட்டங்கள் வெறும் கனவுக் கோட்டைகள், காற்றில் கலையும் மேகங்கள். திட்டமில்லாத செயல்களோ சேமிப்பற்று வீணாகும் மழைநீர் போலாகும். திட்டமிடுதல் அறிவின் கூர்மை. செயல்படுதல் மனதின் வலிமை இவ்விரண்டும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம். வெற்றியை எல்லோரும் விரும்பினாலும், வெகு சிலரே அதனை அடைகின்றனர். என்ன காரணம்? அது திட்டமிடுதலுக்கும், செயல்படுதலுக்கும் இடையில் உள்ள தொலைவைப் பொறுத்தே அமைகின்றது. அகமாகிய அறிவும், புறமாகிய செயலும் இணைந்தாலன்றி இது எட்டாத கனியே. இவ்விரண்டும் கிருஷ்ணனையும். அர்ஜுனனையும் போன்று பொருந்தியிருத்தல் அவசியம்.
திட்டமிடுதல்
ஒரு செயலை திட்டமிடுவதால் கால விரயத்தை தவிர்ப்பதோடு மட்டுமின்றி நம் சிந்தனைகளும் ஒழுங்குபடுகின்றது. குழப்பங்கள் முழுமையாக தவிர்க்கபடுகின்றது. விதிமுறைகளே இல்லாத விளையாட்டு வெறும் கூச்சலில் முடிவது போல் திட்டமில்லாத வாழ்வு நாமே நம் காலடியில் நாமே தோண்டிக் கொள்ளும் கவலைக் கிணறாகும். “எண்ணித் துணிக கருமம் “ என்கிறார் வள்ளுவர். “சரியாகத் திட்டமிடு, குறைவாக வியர்வை சிந்து” என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. நாம் திட்டமிடத் தவறினால், தவறிழைக்கவே திட்டமிடுவது போலாகிவிடும். காலமே அனைவருக்கும் மூலதனம். அது வஞ்சகமின்றி அனைவருக்கும் பொதுவாகவே இருக்கின்றது. வெற்றிக்காக வியர்வை சிந்துபவனுக்கும், வேலையின்றி விரயம் செய்பவனுக்கும் நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம்தான். காலத்தை சரியாக அட்டவணைப்படுத்தி, செயல் புரிந்தோரே சிகரங்களைத் தொட்டனர். ஒரு நாளை திட்டமிடாமல் சந்திப்பதென்பது மிகப் பெரிய குற்றமாகும்.
செயல் புரிதல்
“ எண்ணிய எண்ணியாங்கு எய்துப” என்கிறது வள்ளுவம். நம்முடைய எண்ணங்களை நாம் எண்ணியவாறே செயலாக மாற்றும் அற்புதத் திறனே யோகம் என்கிறது பகவத் கீதை. இடையீடற்ற முயற்சி அதன் அடித்தளம். அம் முயற்ச்சியினின்று நழுவாதிருத்தல் வீரம். மனத் தளர்ச்சியே பலவீனம். பலவீனர்களால் எதையும் எட்டமுடியாது. நான்கு விஷயங்களை பலவீனமாகக் கூறுகின்றது வள்ளுவம். இன் நான்கும் தம் அழிவைத் தேடுவோர் தாமே விரும்பிச் சென்று ஏறிக் கவிழும் படகு என்கிறார் வள்ளுவர்.
முதலாவதாக எதையும் காலம் தாழ்த்திச் செய்வது (நெடுநீர் ) .செயலுக்குக் கூட தக்க பருவம் உண்டு. அதன் நுட்பம் அறிந்தவன் பக்குவன். “காலத்தை நாம் கடத்தவில்லை. காலந்தான் நம்மைக் கடத்துகின்றது” என்கிறார் வடமொழிக் கவிஞர் பர்த்ருஹரி. காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. அதை மதிப்பவனே மனிதன்.
இரண்டாவதாக நினைவாற்றல் இன்மை (மறவி). அறிவில் மந்தத் தன்மை. செயலில் கவனமின்மை. மனதில் உற்சாகமின்மை. இவற்றினால் எழுவதே மறதி. இடைவிடாத ஒருமுகப்பட்ட தியானப் பயிற்சி நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும்.
மூன்றாவது சோம்பல் (மடி). கதிரவனைக் கண்டவுடன் கணநேரம் கண் விழித்துப் பின் முழுமையாக தன்னை மூடிக் கொண்டு உறங்கும் ஒருவித நோய். சோம்பலுடையோர் இதிலோர் சுகமிருப்பதாக சத்தியமிட்டுச் சொல்வர் . சிலருக்கு மனச் சோம்பல். எதையும் ஆழ்ந்து சிந்தித்து, தெளிவு பெற்று செயலாற்ற முடியாத இயலாமை. சோம்பல் நீங்க வேண்டுமெனில் நம் அன்றாட செயல்முறைகளில் நீண்ட காலமாக ஓர் சுய ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் அவசியம். ஒய்வு வேறு. சோம்பல் வேறு. ஓய்வு மீண்டும் செயல்புரிவதற்க்கான உத்வேகத்தைக் கொடுக்கும். சோம்பல் நம்மை அழிக்கத் துடிகும் நிரந்தரப் பகை.
நான்காவது தூக்கம்(துயில்) . உணவு, உறக்கம் , மற்றும் உலகியல் ஈடுபாடுகளில் மிதமான போக்கை கடைபிடிப்பவன் தூக்கத்தை வசப்படுத்துகின்றான். வசப்படாத தூக்கம் மரணத்திற்குச் சமம்.
ஆகவே இந் நான்கையும் தவிர்ப்பவன் செயலின் இரகசியத்தை அறிந்து தன்னை தானே உயர்த்திக் கொள்கின்றான்.
செயலின் இரகசியம்
படைப்பின் ஆக்கப்பூர்வான நிகழ்வே செயல். செயலின்றி உலகில்லை. மகத்தான நிகழ்வுகளின் பின்னனியில் , புலன்களுக்குப் புலப்படாத அதி நுட்பமான அறிவின் வெளிப்பாடு இருக்கின்றது. அந்த அறிவு மாசுபடாதது. எல்லையற்றது. தெய்வீகத் தன்மை பொருந்தியது. நம் அனைவரிலும் மேலோங்கி நிற்கின்றது. அது வெளிப்படும் தளம் மனம். பின்பே செயலாக்கம் பெறுகின்றது. “மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே “ என்கிறது சித்தர் பாடல். அறிவு செயலாக்கம் பெற மன ஒருமுகப்பாடு அவசியம். நாமனைவரும் செயலை நிகழ்காலத்திலேயே செய்கின்றோம். அதுவே சாத்தியம். செயலை கடந்த காலத்திலேயோ அல்லது எதிர்காலத்திலோ செய்ய இயலாது. எதிர் காலத்தை உருவாக்கும் திறன் நிகழ் காலத்திற்கு மட்டுமே உண்டு. ஆகவே செயல் புரியும் பொழுது கடந்த கால நினைவுகளின் குறிக்கீடுகளோ, எதிர்காலத்தை கூறித்த அச்சமோ, அல்லது நிகழ் காலத்தில் பதட்டமோ இல்லாதிருத்தல் அவசியம். கடந்த கால அனுபவங்களும், எதிர் காலம் குறித்த திட்டங்களும், நிகழ்காலத்தில் துணை நின்றால் தவறில்லை. பயிற்சியினாலும், இலக்கைத் தவிர்த்துப் பிற விஷயங்களில் ஏற்படும் பற்றற்ற தன்மையினாலும் மனம் வலுப்பெறுகின்றஅது. வலுவான மனம் அறிவின் ஆழத்தை அச்சமின்றித் தொடும் ஆற்றலைப் பெறுகின்றது. அது நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகின்றது. நம்மைச் சுற்றிலும் ஓர் பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ஆகவேதான் திட்டமிடுதலும்,செயல்படுதலும் அதற்கான மனவலிமையை வளர்த்துக் கொள்வதும் மனித வாழ்விற்கு மணம் சேர்க்கும். வாழ்வோம்! வளர்வோம்!
Last modified on Sunday, 17 February 2019 09:17